சதாசிவ சமாரம்பாம்
ஸ்ரீ கண்டாசார்ய மதியமாம்!
அஸ்மதாசார்ய பர்யந்தாம்
வந்தே குருபரம் பராம்!!
தாரமும் குருவும் தலைவிதிப்பயனே! என்பது முதுமொழி. மனிதனுடைய வாழ்நாளில் ஞானம் பொருந்திய வாழ்க்கையை வாழ்வதற்கு அஞ்ஞானத்தை போக்கக்கூடிய ஒருவர் மிக அவசியம். அவரையே சாத்திரங்களிலே “தம்முதல் குருவுமாய் “ என்றும், “குருவடிவாகிக் குவலயந்தண்ணில்” என்றும் போற்றுகின்றன அத்தகைய ஞான குருவாயும்,
“கல்லாத புல்லறிவின் கடைப்பட்ட நாயேனை,
வல்லாளனாய் வந்து வனப்பெய்தி இருக்கும் வண்ணம்
பல்லோரும் காணஎந்தன் பசு – பாசம் அறுத்தானை”
என்ற திருவாசகத்திற்கு ஒப்பிட்டு ஓர் ஞானத்தந்தையை எங்கள் வாழ்விலே பெற்றிருக்கிறோம் என்றால், அது எங்களுடைய அல்லூர் குருநாதர் அவர்களைத் தவிர வேறொன்றுமில்லை. நியாய சாத்திரங்களிலே இரண்டு உதாரணங்கள் உண்டு. ஒன்று குரங்கினிடத்திலே அது ஈன்ற குட்டியானது தானாகவே சென்று தாயைப் பற்றிக் கொள்ளும், மற்றொன்று பூனையானது தனது குட்டியை தானாகவே கவ்விக்கொண்டு சென்று அதை பாதுகாக்கும். எங்கள் குருநாதர் அவர்கள் எங்களை எங்கள் பக்குவத்திற்கு ஏற்ப அந்தந்த கால கட்டங்களிலே எங்களையெல்லாம் ஞானமுடையவர்களாகச் செய்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.