சிவஸ்ரீ வை.விஸ்வநாத சிவாச்சாரியார் – அல்லூர்
அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாரன் சுவாமிகள் ஆலய பரம்பரை அர்ச்சகரும், பழுர் ஸ்ரீ விஸ்வநாதசுவாமி ஆலய பரம்பரை அர்ச்சகருமான சிவஸ்ரீ வைத்தியநாத சிவாச்சாரியார்-மீனாக்ஷி அம்மாள் தம்பதிகளுக்கு ரக்தாக்ஷி வருஷம் மார்கழி மாதம் 2-ம் தேதி பிறந்தார்.
தனது பிதாமஹர் தாத்தாவிடம் ஆகமங்களை கற்றுணர்ந்தார். பழுர் டெப்டி கலெக்டர் இராமச்சந்த்ர ஐயர் வேத சாஸ்த்ர பாடசாலையில் வேதம், சாஸ்திரங்களை படித்தார். இவரது தீக்ஷாநாமம் ” ஸத்யோஜாத சிவம்”. இவருக்கு 1 புதல்வரும் இரண்டு புதல்விகளும் உள்ளனர்.
பல ஆயிரக்கணக்கான ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் தலைமை ஏற்று சர்வசாதகராக பணிபுரிந்து வந்தவர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் நான்கு முறையும், திருவானைக்காவல் மூன்று முறையும், குமார வயலூர் திருக்கோயில் இரண்டு முறையும், குளித்தலை, கரூர், மகாதானபுரம், பவானி, கொடுமுடி, பொள்ளாச்சி, மாந்துறை, டால்மியாபுரம், நாக்பூர், சங்கரன்கோவில், பழுர், அல்லூர், தஞ்சை, தாமிரபரணி, கும்பகோணம், நல்லச்சேரி ஆகிய சிவாலயங்கள் கும்பாபிஷேகம் முக்கியமானவை.
இவற்றைத் தவிர விசேஷமான தனி ஆலயங்கள், பொள்ளாச்சி ஸ்ரீ காமாக்ஷி ஆலயம், ஆனைமலை ஸ்ரீ மாசானி அம்மன் ஆலயம், பாலக்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயம், ஊத்துக்குளி ஸ்ரீ முருகன் ஆலயம், திருப்பூர் ஸ்ரீ காமாக்ஷியம்மன் ஆலயம், உறையூர் ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயம், மணப்பாறை ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், மகாகள்ளிக்குடி ஸ்ரீ அம்மன் ஆலயம், கண்ணபுரம் ஸ்ரீ ஆதிமாரியம்மன், முசிறி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி ஆலயம், பம்பாய் ஸ்ரீ முருகன் ஆலயம், டெல்லி உத்திர சுவாமிமலை ஸ்ரீ முருகன் ஆலயம், பழமுதிர்சோலை ஸ்ரீ முருகன் ஆலயம், திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகன் ஆலயம், கடம்பூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், திருச்சி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்மன் ஆலயம், சோழமாநகர் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி ஆலயம், குருஜி கிருபானந்தவாரியாரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, கோவை ஸ்ரீ முருகன் ஆலயம் ஆகியவை இவருடைய சர்வசாதகத்தில் நிகழ்த்தப்பட்டவை.
பல அன்பர்களுக்கும், சீடர்களுக்கும் தீக்ஷை செய்துவைத்துள்ளார்.உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயத்தில் 25 ஆண்டுகளாக “சதசண்டி ஹோமம்” நடத்திவந்தார். பழுர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலய திருப்பணி கமிட்டி தலைவராகவும், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் திருப்பணி கமிட்டி தலைவராகவும் இருந்து வந்துள்ளார். பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்து சிவாச்சாரிய சமுதாயத்துக்கு பெருமை சேர்த்தவர்.சிவாச்சாரிய சமுதாயத்தினர்கள், வேத சிவாகம ஞானம் பெறுவதற்கு ஸ்ரீ காஞ்சி பெரியவர் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அவர்களால் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட வியாஸ பாரத கலாதி ஸதஸ் ஸமாஜத்தின் சார்பாக நிறுவப்பட்டு நாற்பது ஆண்டுகாலமாக சிறப்பாக நடைபெற்று வரும் வேத சிவாகம பாடசாலையின் முதல்வராக பணியாற்றி வந்ததோடு பல சிவாச்சாரிய பெருமக்களை உருவாக்கியவர்.
இவர் எழுதிய நூல்கள் :-
1. கணபதி உபநிஷத் – கிரந்தலிபி
2. சிவாகம தியான ரத்னாவளி – கிரந்தலிபி
3. சிவபூஜா வேதமந்தரம் மஹான்யாசம் – கிரந்தலிபி
4. நவக்ரஹ ப்ரதிஷ்டா ஸங்கிரஹம் – கிரந்தலிபி
5. சத்ருசம்ஹார த்ரிசதி – கிரந்தலிபி
6. ருத்ரபதம் – கிரந்தலிபி
7. விநாயகர், முருகர், சுவாமி ,அம்பாள்,பைரவர், சனீஸ்வரர், ஸகஸ்ரநாமம் – கிரந்தலிபி
8. முருகன் த்ரிசதி – கிரந்தலிபி
9. பூர்வகாரணாகமம் மூலம் முழுமையும் – கிரந்தலிபி
10. சிவாகம ப்ரயோக சந்திரிகா – நாகரலிபி
11. தேவி உபநிஷத் – நாகரலிபி
12. வ்யோமவ்யாபி பதமந்த்ரம் – நாகரலிபி
13. உத்திர காமிகாகமம், தமிழ் உரையுடன் – நாகரலிபி (அறநிலைத்துறை வெளியிடு)
14. குமாரதந்த்ரம் தமிழ் உரையுடன் – நாகரலிபி
இவர் சமயப் பணியுடன், சமுதாயப்பணியும் பல புரிந்து வந்து ஆதி சைவ பெருமக்களுக்கு பெருமை சேர்த்து வந்தார்.
சிவசாயுஜ்யம் அடைந்த அவர் புகழ் தரணி எங்கும் ஓங்கட்டும்.